திருச்சி 

திருச்சி - மும்பை - டெல்லி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால் வணிகர்கள், மக்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, சௌதி அரேபியா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை உள்ளது. உள்நாட்டு சேவையாக திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் திருச்சியில் இருந்து மும்பை மற்றும் பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று வணிகர்களும், மக்களும் வேண்டுகோள் வைத்தனர். 

அதன்படி, ஜெட்ஏர்வேஸ் நிறுவனம், திருச்சியில் இருந்து மும்பை வழியாக டெல்லிக்கு புதிய விமான சேவை இயக்கப்படும் என்று அறிவித்தது. இந்த விமானம் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை திருச்சியில் இருந்து மும்பை வழியாக டெல்லிக்கு இயக்குவது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திருச்சியில் இருந்து மும்பை வரை மட்டுமே இயக்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த விமான சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நேற்று நடைப்பெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி., ஆட்சியர் ராஜாமணி, விமான நிலைய இயக்குனர் குணசேகரன், விமான நிலைய மேலாளர் சென் மற்றும் ஜெட்ஏர்வேஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். 

நேற்று பகல் மும்பையில் இருந்து திருச்சி வந்த விமானத்துக்கு விமான நிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட் முறையில்) வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து இந்த விமானம் தினமும் பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு மும்பை சென்றடையும். அதன்பிறகு அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு டெல்லி சென்றடையும். 

இதேபோல் மறுநாள் காலை இந்த விமானம் 9 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு பகல் 11.30 மணிக்கு மும்பை சென்று, அங்கிருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு 2.10 மணி அளவில் திருச்சிக்கு வந்து சேரும்.

திருச்சி - மும்பை - டெல்லி விமானசேவை தொடங்கப்பட்டுள்ளதால் வணிகர்கள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.