கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர். மற்ற இடங்களில் 50, 100 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தார். மேலும் புதிதாக 2 ஆயிரம் ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
9–ஆம் தேதி வங்கிகள் இயங்காது என்றும், 9, 10–ஆம் தேதிகள் ஏ.டி.எம். மையங்கள் இயங்காது என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்தது.
கடந்த 9–ஆம் தேதி முதல் வங்கிகள் செயல்பட தொடங்கினாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வருகிறார்கள். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாடிக்கையாளர்கள் கூட்டமாக காணப்படுகிறது. அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கின்றனர். இந்த வங்கிகளில் பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்களது கணக்கில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.
மேலும் சிலர் 100 ரூபாய் நோட்டுக்களாக பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த நோட்டிற்கு சில்லரை கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், என அனைத்து பகுதிகளிலும் வங்கிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் ஏ.டி.எம். மையங்கள் 11–ந் தேதி முதல் செயல்படும் என்று அறிவித்த போதிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 சதவீத ஏ.டி.எம். மையங்கள் 4–வது நாளாக நேற்று வரையில் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் இயங்கிய 10 சதவீத ஏ.டி.எம். மையங்களிலும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்தனர். அதிலும் 100 ரூபாய் நோட்டுகளாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே தீர்ந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், பஸ்கள், தியேட்டர்கள் என்று அனைத்து இடங்களிலும் 1000, 500 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறார்கள். பெட்ரோல் பங்க்குகளில் பெறும் தொகை முழுவதற்கும் பெட்ரோல் நிரப்பி வருகிறார்கள். தற்போது 100 ரூபாய் நோட்டுகளை சில நிறுவனங்கள் பொதுமக்களிடம் பெற்றாலும், அதை வீட்டில் பதுக்கி, வீட்டில் ஏற்கனவே வைத்திருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் கொண்டு வருகிறார்கள்.
இதனால் 50, 100 ரூபாய் நோட்டுகளும் அதிக அளவில் பதுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
