கடந்த சில மாதங்களாவே ரயில்வே கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்கும் நோக்கில் ரயில் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை சுட்டுப்பிடிக்க ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கிளிதாண்பட்டறை பகுதியில் ரயில்வே சிக்னல் உள்ளது. இங்கு இரண்டு நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் ரயில்வே சிக்னலை துண்டித்த மர்ம கும்பல், ஐதராபாத் - திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு ரயிலில் பயணித்த ஆந்திராவை சேர்ந்த பெண்கள் 3 பேரிடம் 12 சவரன் நகை, ஏடிஎம் கார்டு, கைப்பை ஆகியவை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். 

இதனையடுத்து ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு, ரயில்வே காவல்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த பகுதியில் தொடர்ந்து கொள்ளை நிகழ்ந்துள்ளதால், அங்கு துப்பாக்கி ஏந்திய 3 போலீசாரை காவலுக்கு நியமிக்கவும், கொள்ளையரை சுட்டுப் பிடிக்கவும் அவர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

அப்பகுதியில் இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடுபவர்களிடமும் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த கும்பல் காரில் வந்து கொள்ளையடித்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கார் நிறுத்துமிடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.