பெரம்பலூர்

பெரம்பலூரில் நடைப்பெற்ற ஏறு தழுவல் போட்டியில் வயல்வெளியை நோக்கி ஓடிய காளையை பிடிக்க முயன்றபோது, அந்தக் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் நேற்று ஏறு தழுவல் அல்லது மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டாக மாறிய சல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 

இதில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 472 காளைகள் அழைத்துவரப்பட்டி இருந்தன. 

இவைகளில் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 19 காளைகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு 453 காளைகள் ஏறு தழுவல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கபட்டன்.

இதேபோல மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து தகுதியுள்ள 275 பேரை மட்டுமே காளைகளை பிடிக்க அனுமதித்தனர். 

இதில் மாடுபிடி வீரர்கள் இரண்டு கட்டங்களாக பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் வீரர்களுக்கு பிடிபடாமல் ஆட்டம் காட்டின. சில காளைகள் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

அதிவேகமாக பாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர். அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளை ஒன்று, வீரர்களிடம் பிடிபடாமல் வயல்வெளியை நோக்கி ஓடி சென்றது. அந்த காளையை பிடித்து வண்டியில் ஏற்ற சேலம் மாவட்டம் கொண்டையம்பள்ளியை சேர்ந்த கதிரேசன் மகன் பாலமுருகன் (21) என்பவர் முயன்றார். 

அப்போது, காளை முட்டியதில் அவர் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  மேலும் இந்த ஏறு தழுவல் போட்டியில் காளைகள்  முட்டியதில் அரசலூர் செந்தில்குமார் (20), கடம்பூர் பிரவீன் (21), நெய்குப்பை தமிழ்குமார் (13), அ.மேட்டூர் பொன்னுசாமி(53), அன்னமங்கலம் ஜோசப் (34), பெரம்பலூர் மாதேஷ் (24), மதுரையை சேர்ந்த லோகநாதன் (29) உள்பட 44 பேர் காயம் அடைந்தனர். 

காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஏறு தழுவல் போட்டில் பங்கேற்ற காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், கியாஸ் அடுப்பு, வேட்டி மற்றும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. 

ஏழு தழுவல் நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவக்குமார், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) செல்வராஜ், தாசில்தார் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.