20 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக இரண்டு சிறுமிகளை மூதாட்டி  விற்பனை செய்துள்ள சம்பவம் திருவாரூரில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .  பாலியல் சித்திரவதைகள் ,  குழந்தை தொழிலாளர்கள் , கொத்தடிமைகள் என்ன பல்வேறு நிலைகளில்  சிறுமிகள் கொடுமைகளை சந்திக்கும் அவலம் தொடர்கிறது . 

இதனுடன் பெண் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் கொடுமையும் ஆங்காங்கே நடந்து வருகிறது ,   இதை தடுக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திருவாரூரில் 20 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக இரண்டு சிறுமிகள் அவர்களின் சொந்த பாட்டியால் விற்பனை செய்யப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது .  திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற மூதாட்டி அவரது இரண்டு பேத்திகளை இடைத்தரகர்கள் மூலம் 20,000 ரூபாய்க்கு விற்றுள்ளார் .  இதுகுறித்து குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் விற்கப்பட்ட சிறுமிகளை மீட்க   போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் . 

அச் சிறுமிகள் திருப்பூர் பின்னலாடை ஆலையில் வேலை செய்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . பேத்திகளை விற்ற மூதாட்டியையும்  சிறுமிகள் விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட  கனகம் என்ற சகுந்தலா என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .  இந்நிலையில் அவர்கள் மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்துள்ளதுடன் ,  சிறுமிகளை யாருக்கு விற்றனர்,  அந்த சிறுமிகளின் பெற்றோர் யார் என்பன உள்ளிட்ட  பல்வேறு விவரங்கள் குறித்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் .