ஈரோட்டில், மின்னியல் விசைமாற்றியில் ஏறி மின்கம்பியைத் தொட்டு மர்ம இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அவரைப் பற்றிய தகவல்களை காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ளது செம்புளிச்சாம்பாளையம் என்னும் பகுதி. இங்குள்ள ஒலகடம் சாலையில் ஒரு மின்னியல் விசைமாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் செம்புளிச்சாம்பாளையம் - ஒலகடம் சாலையில் இளைஞர் ஒருவர் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார். திடீரென அவர் அந்த மின்னியல் விசைமாற்றி மீதேறி மின் கம்பியை தன் தொட்டதால் நொடிப் பொழுதில் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடைய உடல் மின்னியல் விசைமாற்றியில் தலைகீழாக அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. இச்சம்பவத்தால் செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, காட்டூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் பவானி துணை காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன், அந்தியூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவலாலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த இளைஞரின் உடலை பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தொங்கி கொண்டிருந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இதுகுறித்து அந்தியூர் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட இளைஞரைப் பற்றிய தகவல்களை விசாரித்து வருகிறார்கள்.

இச்சம்பவத்தால் அந்தியூர் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.