கடந்த 8ம் இரவு பிரதமர் நரேந்திர மோடி, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சிறிய, நடுத்தர உணவு விடுதிகள், மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகளில் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ம் இரவு பிரதமர் நரேந்திர மோடி, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததன் காரணமாக தொடக்கத்தில் மொத்தம், சில்லறை வணிகம் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் பணப்புழக்கம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், புதிய ரூ.500 நோட்டுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலும் தற்போது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கே பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் வழக்கமாக நடைபெறும் விற்பனை பாதியாகக் குறைந்துவிட்டது.

இதுகுறித்துகடைக்காரர்கள் கூறுகையில், கடைக்கு வருபவர்கள் ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை கொடுத்து பொருள்களை வாங்குகின்றனர். அவர்களுக்கு சில்லறை கொடுக்க முடியாமல் தவிக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் அவர்களிடம் சில்லறை இல்லை என்று திருப்பி அனுப்பிவிட நேரிடுகிறது.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு கொடுத்து சாமான்கள் வாங்கினால் பிரச்னை இல்லாமல் பொருள்கள் தருகிறோம். எனினும் மத்திய அரசு ரூ.100, ரூ.50 நோட்டுகளை அதிகம் புழக்கத்தில் விட்டால் நல்லதாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாள்களில் ரூ.60,000 முதல் ரூ.75,000 அளவுக்கு விற்பனையாகும். சில நாள்களில் ரூ.1 லட்சத்தைத் தாண்டும்.

ஆனால் தற்போது இரவு 7.30 மணி வரை ரூ.15,000-க்கு மட்டுமே விற்பனயாகிறது. கடந்த சில நாட்களாக நாங்கள் கடனாகவே பொருள்களை தந்து வருகிறோம். புதிய ரூ.500 நோட்டுகள் திங்கள்கிழமை (இன்று) முதல் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.2,000 புதிய நோட்டைப் போன்று அல்லாமல் அதிகளவில் 500 ரூபாய் புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடவேண்டும். இல்லாவிட்டால் அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதில் பொதுமக்களுக்கு மேலும் சிரமம் ஏற்படுவதோடு, வியாபாரம் முழுவதுமாக முடங்கி விடும் என்றார்.
ஓட்டல் நடத்தும் சிலர் கூறுகையில், சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள மிகப்பெரிய உணவகங்களில் விற்பனை 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபாய் நோட்டு பிரச்னையால் இங்கு உணவு சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி சாப்பிடுபவர்களால் எங்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் காசு கொடுத்து சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சில்லறை பிரச்னையே இதற்கு முக்கிய காரணம் என்றனர்.

செல்லாத நோட்டுகள் காரணமாகவும், சில்லறை தட்டுப்பாடு காரணமாகவும் சாலையோர உணவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் கட்டுப்படியாகும் விலைக்கு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் வசதி இல்லாததால் கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. புதிய நோட்டுகளோ அல்லது சில்லறை நோட்டுகளோ இல்லாதவர்களை வேறுவழியில்லாமல் திருப்பி அனுப்பிவிடுகிறோம்.

பழங்கள், காய்கறிகள் விற்பனை இல்லாமல் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி இருந்தது. வழக்கமாக பூக்கள், காய்கறி, பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், கடந்த 5 நாட்ள்களாக விற்பனை மந்தமாக உள்ளது.

ரூபாய் நோட்டுப் பிரச்னையால் எங்களால் அதிக அளவிலும் கொள்முதல் செய்ய முடியவில்லை. வாங்கி வைத்த பொருள்களும் விற்பனையாகவில்லை. காய்கள், கனிகள் அழுகும் பொருள்கள் என்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. நிலை இப்படியே தொடர்ந்தால் காய்கறிகள் வரத்து குறைந்து விலை ஏறும் அபாயம் உள்ளது என காய்கறி கடைக்காரர்கள் புலம்புகிறார்கள்.

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவ கிளினிக்குகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர, ஏழை நோயாளிகள் சிகிச்சைக்காக அவசரமாக வருகிறார்கள். அவர்களை சில்லறை இல்லை என்று சொல்லி எப்படி திருப்பியனுப்ப முடியும்? சிகிச்சைக்கு வருபவர்கள் ரூ.2000 நோட்டுகளைக் கொடுத்தால் அவர்களுக்கு ஆலோசனைக் கட்டணம் போக மீதி ரூ.1,500 தர வேண்டியுள்ளது. அந்த நிலையில் ரூ.500 நோட்டை வாங்க அவர்கள் மறுக்கிறார்கள்.