took action against minister and police who bribed for Gudka pan

தடை விதிக்கப்பட்ட குட்கா, பான் மசாலாவை தமிழகத்தில் விற்பனை செய்ய ரூ.40 கோடி இலஞ்சம் பெற்ற அமைச்சர், காவல் துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பிரச்சார இயக்கத்தை நடத்துகிறது. அதன்படி, கடலூரில் தொடங்கிய பிரச்சார இயக்கத்திற்கு கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் வி.குளோப் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் துரை.ரவிக்குமார் இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பிரச்சார இயக்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

“மத்திய பாஜக அரசு தமிழக நலனைப் புறக்கணித்து வருகிறது. மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய அரசிடமிருந்து நமது உரிமை, நலனைப் பாதுகாக்காமல் பதவியை தக்கவைத்துக் கொள்வதிலேயே தமிழக அரசு ஈடுபடுகிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கன்னியாகுமரி, விருதுநகர், உதகை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கடலூர் ஆகிய ஆறு இடங்களிலிருந்து பிரச்சார இயக்கம் தொடங்கியுள்ளோம்.

இந்த இயக்கம் ஜூலை 5-ஆம் தேதி திருச்சியில் நிறைவடைந்து, பொதுக்கூட்டம் நடைப்பெறுகிறது. அதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் குறித்து அறிவிப்போம்.

தடை விதிக்கப்பட்ட குட்கா, பான் மசாலாவை தமிழகத்தில் விற்பனை செய்ய அமைச்சர், காவல் துறையினர் ரூ.40 கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி அளித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வருமான வரித் துறையினர் பல சோதனைகளை மேற்கொண்ட போதிலும், அதன் தொடர்ச்சியான நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. இது, அரசியல் உள்நோக்கத்துடன் சோதனை நடத்தப்பட்டதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.

பிரச்சார இயக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.