ஈரோடு

நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரத்து 252 மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். விடைத்தாள்கள் பலத்த போலீஸ்  பாதுகாப்புடன் காக்கப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை மூலம் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. தமிழ்நாடு முழுவதும் இதற்கான ஏற்பாடுகளை கல்வி அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத் தேர்வுக்காக 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 208 பள்ளிக் கூடங்களில் படிக்கும் 12 ஆயிரத்து 98 மாணவர்கள், 13 ஆயிரத்து 154 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 252 பேர் இந்தத் தேர்வை எழுகின்றனர்.

இது தவிர தனித் தேர்வர்களுக்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கல்வி மாவட்டத்தில் கலைமகள் கல்வி நிலையம், இரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி என 3 தனித்தேர்வர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 1003 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

கோபியில் பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளிக்கூடம் மற்றும் பாரதி மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் தனித்தேர்வர்கள் 602 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வுக்கான வினாத்தாள்கள் ஒன்பது கட்டுக்காப்பு மையங்களில் காவல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் அதிகாலை முதல் வழித்தட அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் தேர்வுப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் நிலைக்குழு மற்றும் பறக்கும் படையில் 172 பேர் ஈடுபடுகிறார்கள். தேர்வு அறை முதன்மை கண்காணிப்பாளர்கள் 87 பேரும், துறை அதிகாரிகள் 87 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்வு அறை கண்காணிப்பு பணிக்கு 1620 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் தடையின்றி தேர்வு எழுத தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக தேர்வு நேரத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சார வாரிய அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர்.

விடைத்தாள்கள் பெறும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஈரோடு பகுதிக்கான தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட உள்ள வினாத்தாள்கள் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு துப்பாக்கி ஏந்திய காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.