பாலக்கோடு

தர்மபுரியில் தக்காளி உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை வழக்கத்தை விட அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தக்காளியின் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தக்காளி உற்பத்தி அதிகமுள்ள மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரி இருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் தக்காளிதான், சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பெங்களூரு உள்பட கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்பபடுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விலை வீழ்ச்சி காரணமாக ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை தக்காளி விற்பனையானது.

தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தக்காளி உற்பத்தி அண்மையில் பாதிக்கப்பட்டதால் பாலக்கோட்டில் உள்ள தக்காளி சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு தக்காளி விலை சற்று உயர்ந்து ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.11 என்ற விலைகளில் உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி உற்பத்தி இன்னும் குறைந்துள்ளதால் விலை தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.22–க்கு விற்பனை செய்யப்பட்டது.

பாலக்கோடு பகுதியில் உள்ள தக்காளி சந்தையில் 30 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. இந்நிலையில் வெளி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனையானது.

தக்காளி உற்பத்தி கணிசமாக குறைந்திருப்பதால் அதன் விலை அடுத்த சில வாரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த நேரங்களில் தக்காளியை பதுக்கி வைத்து, விலை ஏறியதும் விற்று இலாபம் பார்க்கலாம் என்று நினைக்கும் பணப் பேய்களும் இருப்பார்கள். எனவே, மக்கள் தேவைக்கேற்ப தக்காளியை வாங்கிக் கொண்டு மற்றவர்கள் வாங்கி பயனடையவும் உதவவும்.