மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலிக்க உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
சுங்க சாவடி கட்டணம் வசூலிக்க தடை
மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன் 4ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்தது. ஆனால், இந்த இரண்டு சுங்க சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மட்டுமல்லாமல் அவசர வழக்காக விசாரிக்கக் கோரியதை அடுத்து நேற்று விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அதற்கு முன்பே மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் பாலகிருஷ்ணன் கேவியட் மனுத்தாக்கல் செய்திருந்தார். சனிக்கிழமை, வழக்கு ஆவணங்கள் கிடைத்த பின் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் பாலகிருஷ்ணன் சார்பில் வாதிட மூத்த வழக்கறிஞர்களைத் தேடியபோது, பல மூத்த வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற கோடை விடுமுறையில், வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள் இன்னும் சிலர் கட்டணமாக 5 முதல் 10 லட்ச ரூபாய் கேட்டனர். காலம் குறைவு, நிதியும் குறைவு என்ற நிலையில், பலரையும் தொடர்பு கொண்டு உதவி கோரினோம். லாரி சங்கங்கள், தனிநபர்கள் உதவிய நிலையில் நிதி போதவில்லை. இச்சூழலில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நமக்கு உதவ முன் வந்தார். அமைச்சரே, நேரடியாக மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்களைத் தொடர்புகொண்டு, தூத்துக்குடி மக்களின் பாதிப்புகளைச் சொல்லி, நமக்காக ஆஜராகக் கோரினார்.
இடைக்காலத் தடை
அதனை ஏற்று நேற்று காலை சென்னையிலிருந்து, உச்சநீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகச் சென்ற மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குமணன் உதவியுடன் ஆஜராகி வாதிட்டார். 51-வது வழக்காக நமது வழக்கு எடுக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், ஆன்லைனில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் வாதமே செய்யாத நிலையில், இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மூத்த வழக்கறிஞர் வில்சன்
அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் வில்சன், இதே டோல்களுக்கு இதற்கு முன்பும் நீதிமன்றங்கள் தடை விதித்ததைக் குறிப்பிட்டு, தொடர்ந்து சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை என சொன்னார். அதனை தொடர்ந்து நீதிபதிகள் தடை விதிக்கிறோம் என்று சொன்ன நிலையில், தூத்துக்குடியில் நடப்பது, "பகல் நேரத்தில் நடக்கும் வழிப்பறிக் கொள்ளை " எனக் கடுமையாகச் சொன்னார்.
வழக்கு ஒத்திவைப்பு
அதன்பிறகு நீதிபதிகள் பாலகிருஷ்ணன் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யச் சொல்லி வழக்கை ஒத்திவைத்ததுடன், உடனடியாக மதுரை உயர்நீமன்ற கிளை உத்தரவிற்கும் தடை விதித்தனர். டோல்கேட்டுக்கு எதிரான தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுவதைக் கூடக் கேட்க விரும்பாமல் நீங்கள் தொடர்ந்து வாதிட முயன்றால் NHAI அப்பீலை மொத்தமாக அனுமதித்து விடுவேன் என ஒரு நீதிபதி குறிப்பிட்ட நிலையில், மற்றொரு நீதிபதி பதில்மனு தாக்கல் செய்யுங்கள் வில்சன் என சொல்லி வழக்கை ஒத்திவைத்தனர்.
