Bandh in tamilnadu
தொடங்கியது விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம்… பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் …
விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருளுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பங்கேற்பதால் பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதால் , கடைகள் அனைத்தும் மூடப்படும் என தெரிகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையும் இன்று ஒரு நாள் மூடப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களை மூடப் போவதாக அந்த சங்கத்தினர்அறிவித்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நண்பகல், பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவைத் தெரிவித்துள்ளன.இதனால் தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் , சென்னையில் 12 ஆயிரம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
