மதுரை, விருதுநகர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்த நிலையில் சென்னையில் இன்று மாலை மழை வெளுத்து வாங்கப் போதாக தமிழ்நாடு  வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரவு நேரங்களிலும், நாளையும் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்  இமயமலைப்பகுதிகள், பிஹார், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. வட மாநிலங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கபினியில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு  மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

சென்னைப் பொறுத்தவரை இன்று மாலை அல்லது நாளை மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்ய சாதகமான சூழல்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மழை மாலை நேரத்தில் பெய்தால் இடியுடன் கூடிய மழையாகவும், இரவு நேரத்தில் மழைபெய்யும் இடிமின்னல் இருக்காது என்றும் கடற்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுவீசத் தொடங்கும் போது, மழைக்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் இன்றும்  மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள பிரதீப் ஜான் , அதன்பின் சில நாட்களுக்கு மழை இருக்காது எனத் தெரிவித்தார்.