தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது சென்னை வானிலை மையம்.

குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக இன்று (12-ம் தேதி) தென்தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்கள்மற்றும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

13, 14, 15-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்டவானிலையே நிலவும்.

11-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 8செமீ, வேதாரண்யத்தில் 7 செமீ,திருப்பூண்டியில் 5 செமீ, வேளாங்கண்ணியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.