கடந்த சில நாட்களாக கடும் புயலாக இருந்த ‘கியான்ட்’ புயல் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. இதனால், இன்று மாலையில், பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை மதியத்துக்கு முன்னதாகவே, வாங்கி கொண்டு வீடு போய் சேர்ந்துவிட வேண்டும் என நம் மக்கள், கடைகளில் அலைமோதி கொண்டு இருக்கின்றனர்.
வங்கக் கடலை மிரட்டிய, 'கியான்ட்' புயல், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துவிட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில், இன்று மாலை லேசாக தொடங்கும் மழை, இரவு கனமழையாக பெய்யலாம்.
வங்கக் கடலின் மத்திய பகுதியில், அக்டோபர் 21ம் தேதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது புயலாக மாறி, மியான்மரை தாக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதற்கேற்ப, 'கியான்ட்' புயலாக உருவாகி, மியான்மர் அருகே சென்றது.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, இந்த புயல், திடீரென இந்தியாவின் பக்கம், 'ப' வடிவில் திரும்பி விட்டது. நேற்று அதிகாலை, இப்புயல் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னை மற்றும் ஆந்திராவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியை நோக்கி நகரும் இந்த மண்டலம், இன்று தீவிரத்தை இழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையொட்டி ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்கள், தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் புதுவையின் வடக்கு கடலோர மாவட்டங்களில், இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை, கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கண்ட பகுதிகள், கடந்த டிசம்பர் மாதத்தில் தத்தளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில், வெப்பச்சலனம் காரணமாக, லேசான மழை பெய்யலாம். மீனவர்கள், ஆந்திர கடற்பகுதியை நெருங்கி செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்படுகின்றனர். சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி மற்றும் நாகை துறைமுகங்களில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
