today and tommorroa rain in tn and pondi also chennai

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுவும் சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சேலம் உட்பட நேற்று பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளமாக மழை நீர் ஓடியது. சேலத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இந்த மழைநீரில் மூழ்கி இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 36.28 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 13.38 செ.மீ., ஏற்காட்டில் 11.68 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது..தற்போது சென்னையில் சூளைமேடு, அரும்பாக்கம், தி.நகர், கே.கே.நகர், பல்லாவரம், மீனம்பாக்கம், போரூர், முகலிவாக்கம், முகப்பேர், அம்பத்தூர், மதுரவாயில், பம்மல், சைதாப்பேட்டை, தாம்பரம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

மேலும், தென்மேற்கு பகுதிகளில் இருந்து வீசும் பலத்த காற்று வீசும் என்பதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இருந்து வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கடலில் 35 முதல் 45 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.