திருச்சி
 
காவிரிக்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆடு, மாடுகளுடன் சமூக நீதிப்பேரவையினர் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது சோமரசம் பேட்டையில் இருந்து சமூக நீதிப்பேரவை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அதன் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் தலைமையில் இரண்டு மாடுகள் மற்றும் ஒரு ஆடு ஆகியவற்றுடன் வந்தனர். 

அந்த ஆடு மற்றும் மாடுகளின் கழுத்தில் தண்ணீரின்றி தவிக்கும் எங்களை வாழ விடுங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. 

ஆட்சியர் அலுவலக வாசலில் காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்கள், "திருச்சி மாவட்டம் பாவப்பட்ட பூமியாக மாறிவிட்டது. காவிரி ஆற்றில் இருக்கின்ற மணலை எல்லாம் அள்ளி நிலத்தடி நீர் வற்றியதால் கால்நடைகள் கூட வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் காவிரிக்காக போராடிய மாணவர்களை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி கால்நடைகளுடன் மனு கொடுக்க வந்துள்ளோம். 

எனவே, இந்த மனுக்களை ஆட்சியரிடம் கொடுக்க அனுமதிக்க வேண்டும்" என்று காவலாளர்களிடம் கேட்டனர். 

ஆனால், காவலாளர்கள் கால்நடைகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அவற்றை இங்கேயே நிறுத்திவிட்டு நீங்கள் மட்டும் உள்ளே செல்லலாம் என்றனர். இதனால் காவலாளர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், கால்நடைகளை வெளியே நிற்க வைத்துவிட்டு சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் மட்டும் மனு கொடுப்பதற்காக உள்ளே சென்றனர். 

இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வாசலில் பரபரப்பை ஏற்பட காரணமாக இருந்தது.