திருச்சி

காவிரி நதி நீர், முல்லைப் பெரியாறு அணை ஆகியவற்றில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் திருச்சியில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பில் விவசாயிகள் உரிமை மீட்பு மாநாடு நேற்று உழவர் சந்தை மைதானத்தில் நடந்தது.

இந்த மாநாட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேசிய செயற்குழு உறுப்பினர் அசுதோஸ் பங்கேற்றுப் பேசினார்.

இந்த மாநாட்டில், “காவிரி நதி நீர், முல்லைப் பெரியாறு அணை ஆகியவற்றில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி பாசன ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

நெடுவாசல், ஐட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் தென்னிந்திய மாநிலப் பொறுப்பாளர் சோம்நாத்பாரதி எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்று தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.