திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க மனைவியுடன் சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. இதனால், கணவர் மனவேதனை அடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசூரான் (60) விவசாயி.

இவரது மனைவி நாகம்மாள் (48). இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு, ஆறு மாதங்களாக, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சனவரி மாதம் 30-ஆம் தேதி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், ஓசூரான் தனது மனைவி நாகம்மாளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தார்.

அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாகம்மாளை அமர வைத்துவிட்டு உள்ளேச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, நாகம்மாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த வருத்தம் அடைந்தார்.

மேலும், பல்வேறு இடங்களில் நண்பர்களின் உதவியுடன் தேடி வந்தனர். ஆனால், நாகம்மாள் கிடைக்கவில்லை.

பின்னர், இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஓசூரான் நேற்று புகார் அளித்தார். காவலாளர்கள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.