பழிக்கு பழியாக வாலிபரை ஓட ஓட விரட்டி, சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஸ்ரீபெரும்புதுஹர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவாட்டம் ஊத்துக்கோட்டை அருகே தாமரைப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ் (30). 
நேற்று மாலை ரமேஷ், தனது நண்பர் திருவள்ளூர் அருகே சித்திரை கிராமத்தை சேர்ந்த ராஜி என்பவருடன் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைப்பட்டு கிராமத்தை சேர்ந்த மற்றொரு நண்பர் சீனிவாசன் என்பரை சந்திக்க பைக்கில் புறப்பட்டார்.
பிள்ளைப்பாக்கம் கூட் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே 2 பேர் பெரிய வீச்சரிவாளுடன், ரமேஷை நோக்கி ஓடி வந்தனர். இதனால், பயந்துபோன அவர், பைக்கை அங்கேயே போட்டுவிட்டு ஓடினார். உடன் வந்த ராஜி, ஒன்றும் புரியாமல் திகைத்து அப்படியே நின்றார்.
ரமேஷ் ஓடி சென்றபோது, எதிர் திசையில் மற்றொருவர் பெரிய வீச்சரிவாளுடன் ஓடிவந்தார். இதனால், ரமேஷ், அருகில் உள்ள செடி புதர்களுக்குள் ஓடி ஒளிந்தார். ஆனால், அவரை விடாமல் விரட்டிய 3 பேர், புதர் பகுதிக்கு சென்று, ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதை பார்த்த ராஜி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் அஙகு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பேரீலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், கடந்த 2012ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே தொடுகாடு என்ற பகுதியில் உள்ள கேன்டீனில் ரமேஷ் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தார். அப்போது, கேன்டீன் ஏலம் விடப்பட்டு, வேறு ஒருவர் வாங்கினார். இதனால், அவருக்கு வேலை இல்லாமல் போனது.
இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ், தனது அண்ணன் சுரேஷ் மற்றும் நண்பர்கள் சிலருடன் அந்த கேன்டீனுக்கு சென்று 3 பேரை சரமாரியாக வெட்டினர். அதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
இந்த முன் விரோதத்தால், பழிக்குப்பழியாக கடந்த ஆண்டு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால், பயந்துபோன ரமேஷ், தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை நண்பரை சந்திக்க ரமேஷ், அங்கு செல்வது, எதிர் தரப்பினருக்கு தெரிந்துள்ளது. அதன்படி அவரை, பழிக்கு பழிவாங்கினர் என விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் கொலை செய்து தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.