காஞ்சிபுரம்

"நோக்கியாவின் புதிய நிறுவனத்தில் வேலை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மூடப்பட்ட நோக்கியாவால் வேலையிழந்த தொழிலாளர்கள், ஆட்சியரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். 

வேலையிழந்த நோக்கியா நிறுவன தொழிலாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு  அளித்தனர்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு திருபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பை தொடங்கியது. மாதத்திற்கு 1.5 கோடி செல்போன்கள் உலகின் மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி ஆலையாக திகழ்ந்தது. 

இலாபகரமாக இயங்கி வந்த ஆலை 2014-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. இந்தியா மட்டும் அல்லாமல் பிற நாடுகளில் இருந்த நோக்கியா நிறுவனங்களையும் மைக்ரோசாப்ட் வாங்கியது. 

இதனையடுத்து இந்திய வருமான வரித்துறைக்கு சென்னை நோக்கியா நிறுவனம் வரி பாக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே, வருமான வரியை செலுத்தும் வரை சென்னை நோக்கியா ஆலையை முடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் வரி பாக்கிக்காக சென்னை நோக்கியா ஆலையை முடக்கியது. இதனையடுத்து 2014-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது.

இந்த நிலையில் வேலையிழந்த நோக்கியா நிறுவனத் தொழிலாளர்கள் நேற்று காஞ்சிபுரம் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அந்த மனுவில், "காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூரில் நோக்கியா இந்தியா நிறுவனத் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.  கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பரில் சட்டவிரோதமாக ஆலை மூடப்பட்டது. 

இது தொடர்பாக, கடந்த 2015 ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களிலும், 2016 ஜனவரி மாதமும் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியருக்குப் புகார் கொடுத்திருந்தோம். மேலும், தொழிற்சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தோம். 

அதன்படி, நோக்கியா நிறுவனத் தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று தடையாணை பெற்று, தொடர்ந்து வழக்கை நடத்தி வருகிறோம். 

ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி நோக்கியா நிறுவனம் தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் வெளியேற்றி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், 'ரைசிங் ஸ்டார்' எனும் புதிய பெயரில் நோக்கியா நிறுவனம் செல்போன்களை பெருமளவில் உற்பத்தி செய்து வருகிறது. தவிர, தமிழகம் முழுவதுமிருந்து இந்நிறுவனத்தில் பணிபுரிய ஊழியர்களைப் பணியமர்த்தி, உற்பத்தியை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த பெரும்பாலானோருக்கு இழப்பீடு தந்து அனுப்பிவிட்டது.  

இந்த நிலையில், சுமார் 104 பேர் இழப்பீடு எதுவும் பெறாமல், தொடர்ந்து நிறுவன ஊழியர்களாக இருந்து வருகிறோம்.  எனவே, எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய நிறுவனமான 'ரைசிங் ஸ்டார்' நிறுவனத்தில் வேலை வழங்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.