கரூர்

கரூரில் குடிநீர் வேண்டி வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் செய்யலாம் என்று கூடிய மக்களை போராட்டம் நடத்துவதற்கு முன்பே அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீருக்கு ஏற்பாடு செய்வதாக கூறி உறுதியளித்ததால் மக்கள் மகிழ்ச்சியில் கலைந்து சென்றனர்.

கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி, தெற்குப்பள்ளம் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, ஆழ்குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வறட்சிக் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தெற்குப்பள்ளம் பகுதியில் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. இதனால் பாதிரிப்பட்டி பிரிவு சாலையில் இருக்கும் காவிரிக் குடிநீர் குழாயில் இருந்து வெளியேறிய உபரி நீரைப் பிடித்து பயன்படுத்தினர்.

மேலும், உபரியாக காவிரி நீரை மர்ம நபர்கள் சட்ட விரோதமாக விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவிரி குடிநீர் பராமரிப்பு அதிகாரிகள் குளித்தலை - மணப்பாறை பிரதானச் சாலை பாதிரிப்பட்டி பிரிவுச் சாலையில் உள்ள ஏர்வால்வை காவிரி நீர் வெளியேறாதவாறு அடைத்துவிட்டனர்.

இதனால், அந்த ஏர்வால்வில் இருந்து கசிந்து வந்த நீரை மக்கள் பிடிக்க முடியாமல் போனது. இதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளானார்கள்.

இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை குடிநீர் பற்றாக்குறையை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த மக்கள் குடிநீர் வழங்கக்கோரி வெற்றுக் குடங்களுடன் குளித்தலை - மணப்பாறை சாலையில் உள்ள பாதிரிப்பட்டி பிரிவுச் சாலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்த திரண்டனர்.

இதுகுறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர்  மனோகரன் குடிநீர் கேட்டுச் சாலை மறியல் செய்ய வந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் “தெற்குபள்ளம் பகுதிக்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் அனுமதி பெற்று காவிரி குடிநீர் குழாயில் ஏர்வால்வுடன் கூடிய ஒரு திருகுபைப் அமைத்துத் தரப்படும். மேலும் புதிய ஆழ்குழாய் அமைத்து குடிநீரும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டம் நடத்தாமல் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். போராட்டம் நடத்துவதற்கு முன்பே அலுவலர்கள் வந்து குடிநீர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்றதற்கு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.