to escape from Summer heat Travelers can visit manappadu sea village
தூத்துக்குடி
வெளுத்து வாங்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் கடற்கரை கிராமமான மணப்பாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளனர். நாள்தோறும் குவியும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் கடலில் குளித்து உற்சாகம் அடைகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ளது மணப்பாடு. இது இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரை கிராமம். இங்கு நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. இதில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் தென்புறம் கடல் அலைகள் சீற்றம் அதிகமாகவும், வடபுறம் கடல் அலைகள் குறைந்தும் காணப்படும்.
கடல் அலைகள் குறைந்த வடபுறம் சுற்றுலா பயணிகள் அனைவரும் குளித்து மகிழ சிறந்த இடமாக இருந்து வருகிறது. மேலும், அங்கு மணல் திட்டுகள் உருவானதால், கடற்கரையில் ஆழம் குறைவான குட்டை போன்றும் உள்ளது.
இந்தப் பகுதியானது அலைசறுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு உகந்த இடம் என்பதால், வருடந்தோறும் இங்கு தேசிய அலைசறுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருவதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை முன்னிட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மணப்பாட்டுக்கு வந்து செல்கின்றனர்.
இதுமட்டுமின்றி, கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் உள்ளூர்வாசிகள் கூட இந்தப் பகுதிகளில்தான் இதம் காணுகின்றனர். தினமும் காலை, மாலை என எந்த நேரமும் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் மணப்பாட்டுக்கு வந்து செல்கின்றனர். இதனால் மணப்பாடு கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து உற்சாகம் அடைகின்றனர். கடற்கரையில் மணல்திட்டால் உருவான குட்டையில் தேங்கி உள்ள கடல் நீரில் குழந்தைகளை தைரியமாக களமிறக்கி குளிக்க வைத்து மகிழ்கின்றனர்.
