Asianet News TamilAsianet News Tamil

சாதிச் சான்றிதழை சரிபார்க்க டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சாதிச் சான்றிதழை ஆய்வு செய்ய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு மட்டுமே அதிகாரம் உள்ளது என் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

TNPSC can't verify scheduled caste certificate, rules Madras HC
Author
First Published May 4, 2023, 10:44 AM IST

அரசு ஊழியர் ஒருவர் சமர்ப்பிக்கும் பட்டியலின சமூக சாதிச் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யவோ அல்லது சரிபார்க்கவோ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டிஎன்பிஎஸ்சி) அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மாநில அரசால் அமைக்கப்பட்ட மாவட்ட அல்லது மாநில அளவிலான ஆய்வுக் குழு மட்டுமே ஆய்வு செய்ய தகுதியும் அதிகாரமும் கொண்டவது என்று நீதிபதி டி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு தெரிவித்துள்ளது.

பெண் ஊழியரிடமிருந்து புதிய சாதிச் சான்றிதழைக் கேட்டு டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த நோட்டீசை தனி நீதிபதி அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

என். ஜெயராணி என்பவர் 1999 இல் தான் சமர்ப்பித்த எஸ்சி சமூக சாதி சான்றிதழின் அடிப்படையில் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் அவர் தனது தந்தையின் பெயரில் பெறப்பட்ட புதிய சாதிச் சான்றிதழை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஏற்கெனவே அவர் தனது கணவர் பெயரில் வழங்கிய சான்றிதழை ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தது.

இதனால் ஜெயராணி இந்த நோட்டீசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மார்ச் 31, 1993 அன்று தாசில்தார் வழங்கிய சான்றிதழின்படி, ஜெயராணி 1992 இல் இந்துவாக மாறுவதற்கு முன்பு ஒரு கிறிஸ்தவராக இருந்ததும், இப்போது அவர் ஆதி திராவிடராக (எஸ்சி) வாழ்கிறார் என்பதும் தெளிவாகிறது என்று தெரிவித்தார்.

மேலும், டிஎன்பிஎஸ்சி வாதிட்டபடி ஜெயராணியை கிறிஸ்தவ ஆதி திராவிடராகக் கருத முடியாது என்றும் கூறிய தனி நீதிபதி ஜெயராணி இந்து ஆதி திராவிடராக இடஒதுக்கீடு பெறத் தகுதியானவர் என்றும் கூறி தீர்ப்பு வழங்கினார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சாதிச் சான்றிதழை ஆய்வு செய்ய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு மட்டுமே தகுதி உள்ளது என்று கூறி, டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios