மரியாதையும் இல்லை; சரியான ஊதியமும் இல்லை: மரணத்தின் பிடியில் கேங்மேன்கள் - கண்டுகொள்ளுமா தமிழக அரசு?
மின்சார துறையில் பணியாற்றும் கேங்மேன்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மிக்ஜாம் புயல் கரையை கடந்துள்ளது. அப்புயலானது சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. புயல் காரணமாக ஒருநாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை நாம் பார்த்திருப்போம். சென்னை வாசிகள் மட்டுமல்ல இன்றைய காலக்கட்டத்தில் எவருமே மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என்பதுதான் யதார்த்தம்.
அந்த அளவிற்கு மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மின்சாரம் மாறிப் போயுள்ளது. ஆனால் அப்படிப்பட்ட, மக்களின் அடிப்படை தேவைகளுக்காக பணியாற்றும் மின்சார ஊழியர்களின் நிலையோ பரிதாபகரமாக இருக்கிறது. மழையோ, புயலோ, வெயிலோ எதுவாக இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் களத்துக்கு உடனடியாக ஓடும் அவர்களை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை.
குறிப்பாக, அந்த துறையில் அடிமட்ட ஊழியர்களாக கருதப்படும் கேங்மேன்களின் நிலை ரொம்பவே பரிதாபம்தான். குழி தோண்டுவதற்கும், மின்கம்பங்கள் நடுவதற்கும், நட்ட மின்சார கம்பங்களில் சப்ளை இல்லாதபோது ஏறி சரி செய்வதற்கும்தான் கேங்மேன்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
அப்பணிக்கு 5ஆவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். குறைந்த அளவிலேயே படிப்பு தகுதி போதும் என்பதாலோ என்னவோ அவர்களை உயர் அதிகாரிகள் நடத்தும் நிலையை எழுத்தில் அடக்கிவிட முடியாது. மின்சார கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு சென்று இணைப்பை துண்டிக்க சொல்வது, தேவையில்லாத மின்சார கம்பங்களில் ஏற சொல்வது, ஆஃபிஸ் பாய் வேலை பார்க்க சொல்வது என அனைத்துக்கும் அவர்கள் பயன்படுத்தப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அப்படி பயன்படுத்தப்பட்டாலும் அவர்களுக்குரிய மரியாதையையோ, தகுந்த ஊதியத்தையோ கொடுப்பதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக பணி பாதுகாப்பு என்பது அவர்களுக்கு அறவே இல்லை. ஒரு மின்சார கம்பத்தில் ஏற சொன்னால் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை கொடுக்க வேண்டும், சரியான பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்க வேண்டும். ஆனால் அவை எதுவும் அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இல்லை அதெல்லாம் சரியாகத்தான் கொடுக்கிறோம் என்று உயர் அதிகாரிகள் சொன்னாலும் அடிக்கடி நடக்கும் விபத்தும், நிகழும் உயிரிழப்புகளும் உயர் அதிகாரிகள் சொல்வது எல்லாம் பொய் என்பதை உணர்த்துகின்றன.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கிழக்கு பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன் (38) என்ற கேங்மேனை உயர் அதிகாரிகள் உயர்மின் அழுத்த கம்பத்தில் ஏற சொல்லியிருக்கிறார்கள். உயர்மின் அழுத்த கம்பத்தில் ஏறக் கூடாது என்பதுதான் விதிமுறையாக இருந்தாலும், உயர் அதிகாரிகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, ஏறியுள்ளார்.
அதேபோல், சரியான வழிகாட்டுதலோ, பாதுகாப்பு உபகரணங்களோ அவருக்கு கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. மின் விநியோகம் இல்லை என்று உயர் அதிகாரிகள் சொன்னதை நம்பி மின் கம்பத்தில் ஏறிய அல்லது ஏற்றப்பட்ட கேங்மேன் மின் கம்ப இணைப்பை தொட்டிருக்கிறார். அதில் சப்ளை இருந்திருக்கிறது. இதனால் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த அவருக்கு கை, கால்கள் உடைந்திருக்கின்றன.
இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்; விரைவில் தமிழகம் வரும் மத்திய குழு - முதல்வர் ஸ்டாலின் தகவல்!
தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் முருகனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இனி அவரது எதிர்காலம் என்ன; அவரது குடும்பத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அவரை மின்கம்பத்தில் ஏற்றிய உயர் அதிகாரிகளுக்கு எந்த கவலையும் இல்லைல்; அவர்களிடம் அதற்கான பதிலும் இல்லை.
இவர் மட்டுமில்லை இதுபோன்ற தேவையில்லாத வேலையை கொடுப்பதால் விபத்து ஏற்பட்டு 100 கேங்மேன்கள்வரை இறந்தும், அடிபட்டு கை கால்கள் இழந்தும் இருக்கிறார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கேங்மேன்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு வேலை கிடையாது. ஆனால், உயர் அதிகாரிகளுக்கு அப்படி அல்ல; ஆபத்து நிறைந்த மரணத்தின் பிடியில் பணி புரியும் கேங்மேன்களின் வாரிசுகளுக்கு வேலை இல்லை என்பதை எந்தவிதத்தில் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற அவர்களின் நியாயமான கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
இந்நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன்கள் தொழிற்சங்கத்தினர், மாநிலம் முழுவதும் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அறவழியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டையிலும் இந்தப் போராட்டம் நடந்துவருகிறது.
பணி பாதுகாப்பு வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களை கேங்மேன் வேலையிலிருந்து கள உதவியாளர் பணிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேங்மேன்கள் வலியுறுத்தியுள்ளனர். அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் கேங்மேன்களின் வாழ்க்கையில் தமிழ்நாடு மின்சார துறை வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்பதுதான் அனைவரின் திண்ணமான கருத்தாக உள்ளது.