ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி கோரிய அந்த நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 58 நாட்களாக, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம், அண்மையில் காலாவதியான நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வந்தன. ஆலையைத் தொடர்ந்து இயங்க அனுமதிக்க ஸ்டெர்லெட் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆலையில் பராமரிப்பு பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நீட்டித்துள்ளது.

பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடப்பட்ட நிலையில், மீண்டும் இயக்க அனுமதி கிடைக்காததால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மூடல்.