தமிழக அரசின் மருத்துவக்‍ காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு… 312 சிகிச்சை முறைகள் திட்டத்தில் புதிதாக சேர்ப்பு!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக்‍ காப்பீட்டுத் திட்டத் தொகை இந்த ஆண்டு முதல் 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, 312 வகையிலான சிகிச்சை முறைகளும் புதிதாக சேர்க்‍கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரத்து 270 கோடி ரூபாய் நிதி ஒதுக்‍கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏழை எளிய மக்களுக்‍கு நவீன மருத்துவ வசதிகளுடன் அனைவருக்‍கும் சுகாதார வசதி கிடைக்‍கச் செய்யும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்‍ காப்பீட்டுத் திட்டத்தை, ஜெயலலிதா  கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி​வைத்தார்.

இந்த திட்டத்தில் ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, மருத்துவக்‍ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

 சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் 3 ஆயிரத்து 615 கோடி ரூபாய் காப்பீட்டுச் செலவில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 7 லட்சத்து 11 ஆயிரம் பயனாளிகளுக்‍கு ஆயிரத்து 286 கோடி ரூபாய் அளவுக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்‍கு செயல்படுத்தவுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக்‍ காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பு சிகிச்சை முறைகளுக்‍கு தற்போது வழங்கப்படும் ஒன்றரை லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்‍கப்பட்டுள்ளன. தற்போது இந்த திட்டத்தில் உள்ளது போலவே தொடர்ந்து காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மின்னணு அட்டை உபயோகித்து அங்கீரிக்‍கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் பயனாளிகள் சிகிச்சை பெற்றுக்‍கொள்ளலாம்.

இத்திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும், சிகிச்சை பெறும் வழிகாட்டுதலுக்‍கும், சிரமங்கள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்‍ குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.