TN ministers agains TTV Dinakaran will be suspended

தினகரனை தவறாக பேசும் அமைச்சர்கள் தூக்கி எறியப்படுவார்கள்…புகழேந்தி அதிரடி பேச்சு….

டி.டி.வி.தினகரன் பிரச்சனையைப் பொருத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறான முடிவை எடுக்கமாட்டார் என்றும் தினகரன் குறித்து தவறாக பேசும் அமைச்சர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளர் புகழேந்தி எச்சரித்துள்ளார்.

அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என விரிந்து செயல்பட்டு வருகிறது. சசிகலாவால் முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அதே நேரத்தில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து இரு அணிகளும் இணைக்கப்படும் என இரு தரப்புத் தலைவர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் இரு அணிகளும் இணையும் வகையில் அரசியலில் இருந்தது விலகிக் கொள்வதாக தினகரன் அறிவித்தார்.

இதனால் சசிகலா அணியை சேர்ந்தவர்களே தினகரன் மற்றும் சசிகலாவுக்கு எதிராக பேசத் தொடங்கினர்.இந்நிலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தினகரன் தொடர்ந்து அரசியல் பணிகளை கவனிக்கப் போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர், தினகரன் மீண்டும் அரசியலில் ஈடுபடுவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார் என தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாபாளர் புகழேந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்பிரச்சனையில் தவறான வழியில் செல்லமாட்டார் என குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பேசிய அமைச்சர்கள் விரைவில் தூக்கி எறியப்படுவார்கள் என புகழேந்தி எச்சரித்துள்ளார்.