தமிழக அரசின் சாா்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது
தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி, முதற்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டிருந்தது.
மேலும், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திமுக அமைச்சரின் மருமகனை தட்டித்தூக்கிய இபிஎஸ்... அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!
இந்த நிலையில், தமிழக அரசின் சாா்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவைகளில் சிறுதானிய உணவுகளை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூகநலத்துறை முதன்மைச்செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ், வாரத்தில் 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானிய உணவுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவைகளில் சிறுதானிய உணவுகளை சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி, கோதுமை, ரவா, சேமியா, சிறுதானியம், பருப்பு, காய்கறி ஆகியவை அடங்கிய உணவு வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாட்டின் சிறுதானியங்கள் இயக்கம் ஸ்ரீ அன்னாவுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். சிறுதானியங்களின் அவசியத்தையும், அதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி அவர் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
