Asianet News TamilAsianet News Tamil

பெண் குழந்தைகளின் கல்வி ஊக்கத்தொகை.. அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு..

மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
 

TN Govt Announcement
Author
Tamil Nadu, First Published Dec 17, 2021, 12:40 PM IST

பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா 500 ரூபாயும்,  ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்திற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில், ஊக்கத்தொகை வழங்க அஞ்சலகச் சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக வங்கிக் கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதி விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.72,000 என்ற அளவில் உள்ள மாணவிகளுக்கு மட்டும் ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

இந்த நிதியை வழங்க ஏதுவாக ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கிகளிலும் (SCB) கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத் துறை அதிகாரிகளின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்படவுள்ள கல்வி உதவி தொகை குறித்து பட்டியலும் இணைக்கப்பட்டது. இதேபோன்று இந்த கல்வி ஆண்டில் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும்  2 லட்சத்து 64 ஆயிரத்து 898 கிராமப்புற மாணவிகளுக்கு பட்ஜெட் மதிப்பீட்டின் படி 16 கோடியே 75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாயாக இருக்க வேண்டும்..

பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios