காரைக்குடி,

காரைக்குடி அருகே தீப்பிடித்து எரிந்த வீட்டின் தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது சிலிண்டர் வெடித்ததால், தீயணைப்பு வீரர் காயம் அடைந்தார்.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே உள்ளது பேயன்பட்டி. இந்த ஊரில் வசிப்பவர் பாஸ்கர். அவர் அப்பகுதியில் மூங்கில் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா. வழக்கம்போல் புதன்கிழமை பாஸ்கர் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவியும், குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுபோய் விட சென்றுவிட்டார்.

இந்தநிலையில் யாரும் இல்லாத நேரத்தில் பாஸ்கர் வீட்டில் திடீரென தீப்பிடித்து தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனை கண்டவர்கள், உடனடியாக இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்னர் அங்கு விரைந்து வந்த காரைக்குடி தீயணைப்பு படையினர் வீட்டில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிபத்தில் அந்த வீட்டில் இருந்த சிலிண்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு துறை அதிகாரி காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் தீயணைப்பு படையினர் சுமார் 1 மணி நேரம் போராடி அருகில் உள்ள வீடுகளில் பரவாமல் தீயை அணைத்தனர். பின்னர் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டில் எரிந்து போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த தீவிபத்தால் வீட்டில் இருந்த மோட்டார்சைக்கிள், பிரிட்ஜ் உள்ளிட்ட ரூ.1½ இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

மின்கசிவு காரணமாகவே இந்த தீவிபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்து குறித்து குன்றக்குடி காவல் இன்ஸ்பெக்டர் இரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.