திருப்பூர்

உலகமே திரும்பி பார்க்கும் திருப்பூர் தொழில்துறை எங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினரை, ஒடிசா மாநில அரசு தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பூர் பின்னலாடை துறையினர் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தங்கள் வர்த்தக எல்லையை விரிவுபடுத்த திட்டமிட்டும், அதனை செயல்படுத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில் கேரளா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பின்னலாடை தொழில் தொடங்குவதற்காக அந்த மாநில அரசுகள் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று அந்த மாநிலங்களில் தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் தொழில்துறையினர் செய்து வருகின்றனர்.

இதன்படி ஒடிசா மாநிலத்தில் தொழில் தொடங்க அந்த மாநில அரசு மற்றும் தொழில்துறையினர் திருப்பூர் தொழில் துறையினருக்கு தற்போது அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக ஒடிசா மாநில திறன்மேம்பாட்டு கழக தலைவர் சுப்ரோட்டோ பக்ஷி, ஒடிசா மாநில நெசவுத்துறை செயலாளர் சித்ரா ஆறுமுகம் ஆகியோர் நேற்று திருப்பூர் வந்தனர்.

அவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்களை சந்தித்து ஒடிசா மாநிலத்தில் தொழில்தொடங்க அழைப்பு விடுத்தனர். இதற்கான சந்திப்பு கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று நடந்தது.

இளம் இந்தியன்ஸ், தொழில் பாதுகாப்பு குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திலும் ஒடிசா மாநில அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டு, ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில், ஒடிசா மாநில திறன்மேம்பாட்டு கழக தலைவர் சுப்ரோட்டோ பக்ஷி பேசியது:

“ஒடிசா மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதால் சரக்குகளை தங்கு தடையின்றி குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு எங்கள் மாநில அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. நெசவுப் பூங்கா தொடங்குபவர்களுக்கு அதற்கு தேவையான இடம், பயிற்சி, ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க தயாராக உள்ளது.

திறன்மேம்பாட்டு பயிற்சியை தொழிலாளர்களுக்கு கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் தொழில் ஊக்குவிக்கப்படுகிறது.

தொழில்தொடங்குவதற்காக தொழில் மானியக்கடன், வட்டியில்லாத கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தொழில்துறைக்கு தேவையான எந்திரங்கள் சலுகை விலையில் கொடுக்க தயாராக உள்ளது. மேலும், மின்சாரமும் சலுகை விலையில் வழங்கப்படுகிறது.

இம்மாதிரியான வசதிகள் செய்து கொடுக்க எங்கள் அரசு முன்வந்துள்ளதால் திருப்பூர் தொழில்துறையினர் எவ்வித தயக்கமும் இன்றி எங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்கலாம்” என்று அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஒடிசா மாநில நெசவுத்துறை செயலாளர் சித்ரா ஆறுமுகம் பேசியது:

“சாயக்கழிவை பூஜ்ஜிய சதவீத அளவில் சுத்திகரிப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உலகிலேயே திருப்பூர் தொழில்துறையினர் மட்டுமே செயல்படுத்தி வருகின்றனர். இது தொழில்துறைக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

திருப்பூரில் ஒடிசா மாநில தொழிலாளர்கள் அதிகளவு பணியாற்றி வருகின்றனர். அதில் பெண் தொழிலாளர்களுக்கு சிறப்பான தங்கும் விடுதி வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

உலகமே திரும்பி பார்க்கும் திருப்பூர் தொழில்துறை எங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க வருவதை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று பேசினார்.

இதில் ஏராளமான பின்னலாடை தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.