Asianet News TamilAsianet News Tamil

திருப்பூரில் செய்தியாளர் நேசபிரபுவை தாக்கிய வழக்கு: கைதான இருவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்!

திருப்பூரில் தனியார் சேனல் செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல் நடத்தியதாக பிரவீன் மற்றும் சரவணன் என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tiruppur police arrested two accused for the assault on reporter Nesaprabhu sgb
Author
First Published Jan 25, 2024, 5:09 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு புதன்கிழமை இரவு மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டார். நேசபிரபு தற்போது பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் வசித்துவரும் நேசபிரபு மர்ம நபர்கள் தன்னை பின்தொடர்வதை அறிந்து, காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டுள்ளார். அவசர உதவி எண் 100க்கு போன் செய்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் கோரியுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் நேசபிரபு மீது தாக்குதல் நடத்தியதாக ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பிரவீன் மற்றும் திருப்பூர் கேவிஆர் நகரைச் சேர்ந்த பாலு என்பவரின் மகன் சரவணன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட நேசபிரபு (30) திருப்பூர் அய்யம்பாளையத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சபரிவிஜய் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் சபரிவிஜய்யின் கூட்டாளிகளான பிரவீன் மற்றும் சரவணன் இருவரும் கடந்த 3 நாட்களாக நேசபிரவுவைப் பின்தொடர்ந்து சென்று அவரைத் தாக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனிடையே, நேசபிரபு மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் நேசபிரபுவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios