திருநெல்வேலி

நெல்லையில் 7 இலட்சத்து 63 ஆயிரத்து 98 குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசிகள் போடப்பட உள்ளது என்று ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கியது. இந்த பணி வருகிற 28–ஆம் தேதி வரை நடக்கும்.

திருநெல்வேலி நகர கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவிகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணியை திருநெல்வேலி ஆட்சியர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி முதல் கட்டமாக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக, மாவட்டம் முழுவதும் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி 9 மாத குழந்தை முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போடப்படுகிறது.

தற்போது இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 28–ஆம் தேதி வரை இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகள் மற்றும் நகரசபை பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் தடுப்பூசி பணிகள் பயிற்சி பெற்ற சுகாதாரத்துறை பணியாளர்களை கொண்டு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி திட்டமிட்ட முறையில் போடப்படுகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 756 பள்ளிக்கூடங்கள் மற்றும் 2 ஆயிரத்து 564 அங்கன்வாடி மையங்களில் திட்டமிட்ட படி, இந்த மாதத்தில் 9 மாத குழந்தை முதல் 15 வயது வரை உள்ள மொத்தம் 7 இலட்சத்து 63 ஆயிரத்து 98 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்பட உள்ளது.

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 235 பள்ளிக்கூடங்களில் பயிலும் 95 ஆயிரத்து 299 பள்ளி மாணவ – மாணவிகளுக்கும், 119 அங்கன்வாடி மையங்களில் உள்ள 1920 குழந்தைகளுக்கும் 26 மருத்துவ குழுக்கள் மூலமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

இது தட்டம்மை, ரூபெல்லா ஆகிய 2 நோய்களுக்கு பாதுகாப்பு தரும் ஒரே தடுப்பூசியாகும். இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்த இந்த தடுப்பூசியானது அனைத்து குழந்தைகளும் பயனடையும் வகையில், தட்டம்மை, ரூபெல்லா நோயை முற்றிலும் நீக்கும் பொருட்டு தமிழக அரசின் மூலம் தடுப்பூசி வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த தடுப்பூசி பற்றி தவறான தகவல்களை வாட்ஸ்–அப்பில் அளிக்கும் நபர்கள் மீது காவல் துறையின் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சித்தி அத்தியமுனவரா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ், மாநகர நகர்நல அலுவலர் மருத்துவர் பொற்செல்வன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் உமாதேவி, நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபாண்டி, பள்ளி தலைமை ஆசிரியர் நாச்சியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.