டிக் டாக் மியூசிக் செயலியில் பாடலுக்கு ஏற்ப நடித்தபோது எதிர்பாராத விதமாக வாலிபர் கழுத்தை அறுத்துக்கொள்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோ மோ சேலஞ்ச் என்ற தற்கொலை விளையாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதையடுத்து, தற்போது ஓரளவிற்கு பாதிப்பு குறைந்திருக்கிறது. இந்நிலையில் டிக் டாக் எனப்படும் மியூசிக் செயலியில் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப நடனங்கள் ஆடுவதை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றன. இதில் மாணவர்களை விட பெண்களே அதிகமாக ஈடுபாடு காட்டுகின்றனர். 

அவ்வாறு செய்ததை வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவு செய்து வருகின்றனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலரின் வீடியோக்கள் ஆபா சமாகவும் அபாயமானதாகவும் உள்ளன. 

அந்தவகையில், இளைஞர் ஒருவர் நிஜ கத்தியை கையில் வைத்துக்கொண்டு, ‘கொப்பன் கழுத்தில் வெப்பன்டி நைப்பு, நீ தாண்டி அப்புறம் எனக்கு ஒய்ப்பு என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். அப்போது, எதிர்பாராத விதமாக தன்னைத்தானே கழுத்தில் அறுத்து விடுகிறார். உடனே, ரத்தம் கொட்டியது.  பிறகு செய்வதறியாத நிலைக்கு தள்ளப்பட்டு, வீடியோவை துண்டித்துவிடுகிறார். 

இதையடுத்து அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை. தற்போது வாலிபர் கழுத்தை அறுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் விளம்பரம் தேடுவதற்காக இந்த இளைஞர் இப்படி செய்துள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.