சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் மற்றும் முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கிய தெல்கி ஆகியோருக்கு சிறப்பு சலுகைகளை வழங்க அதிகாரிகள் கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதாக கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜெயிலில் சசிகலாவுக்கு பல்வேறு சொகுசு வசதிகள் செய்து கொடுத்துள்ளதாகவும் ரூபா குறற்ம்சாட்டினார்.

இந்த லஞ்ச விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர் மட்ட விசாரணை குழு அமைத்து கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா உத்தரவிட்டார்.

ஒரு வாரத்தில் இந்த லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கையும் ஒரு மாதத்தில் விரிவான அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை குழுவுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அந்தக்குழு இன்று விசாரணையை தொடங்குகிறது.

இந்த நிலையில் சிறைத் துறை உதவி ஐ.ஜி. வீரபத்திர சாமி பரப்பனஅக்ரஹார சிறையில் அதிரடி ஆய்வு செய்தார். சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு பெண் கண்காணிப்பாளர் அனிதாவுடன் சென்று பார்வையிட்டார்.

தெல்கி உள்பட வி.ஐ.பி.க் கள் அடைக்கப்படுள்ள கைதிகளின் அறை, சமையல் அறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

லஞ்ச புகாரில் சிக்கி உள்ள டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் நேற்று ஜெயிலுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் சசிகலா, தெல்கி ஆகியோரின் கோப்புகள், பார்வையாளர்களின் பதிவேடு, சி.சி.டி. கேமிராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அதே நேரத்தில் நேற்று மாலை டி.ஐ.ஜி. ரூபாவும் திடீரென ஜெயிலுக்கு சென்று சசிகலாவின் அறை, சி,சி.டி.வி. வீடியோ அறை, மருத்துவமனை மற்றும் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார். அடுத்தடுத்து மூன்று பேர் சிறையில் ஆண்வு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜெயில் அதிகாரி மீது லஞ்ச புகார் கூறிய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.