ஈரோடு

விதவை சான்று வழங்க ரூ.250 இலஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு முதன்மை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் இரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுசாமி. இவருடைய மனைவி மகேஸ்வரி. ஆறுசாமி இறந்துவிட்டதால் கடந்த 2005-ஆம் ஆண்டு விதவை சான்றிதழ் கேட்டு சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் மகேஸ்வரி விண்ணப்பித்திருந்தார். 

அப்போது, தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிவந்த கோபி நல்லகௌண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணியின் மனைவி நவநிதி, சான்றிதழ் வழங்குவதற்கு மகேஸ்வரியிடம் ரூ.250 இலஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து மகேஸ்வரியின் தம்பியான கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் ஈரோடு இலஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதனைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை மகேஸ்வரியிடம் கொடுத்தனர்.

கடந்த 1-8-2015 அன்று நவநிதியிடம், மகேஸ்வரி இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள், நவநிதி இலஞ்சம் வாங்குவதை கையும் களவுமாக பிடித்தனர். நவநிதியை கைதும் செய்தனர். 

மேலும், அவர் மீது காவலாளர்கள் ஈரோடு முதன்மை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட்டு மலர்வாலண்டினா நேற்று தீர்ப்பு கூறினார். 

அந்த தீர்ப்பில், "இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக நவநிதிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டது.