மூன்று மாதத்திற்கு முன்பு காணாமல்போன ஒருவர் திருநங்கையாக மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கலைவாணி என்பவர் தனது மூத்த மகன் ராகுல் கடந்த ஜனவரி மாதம் திடீரென காணாமல் போய்விட்டதாகவும் காணாமல் போனது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் தனது மகனைக் கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனு போட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஸ்குமார் அடங்கிய அமர்வு காணாமல்போன ராகுலைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து போலீஸார் தீவிர தேட ஆரம்பித்ததும்  ராகுல் விழுப்புரத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், விழுப்புரம் விரைந்த போலீஸார் அங்கிருந்த திருநங்கை சுமித்ராவிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, நான்தான் ராகுல் என்றும் திருநங்கையாக மாறியதால் குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளதாகவும் தெரிவித்த சுமித்ரா, தன்னை இப்படியே விட்டுவிடும்படியும் கேட்டுள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறி அவரை அழைத்து வந்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, ராகுல் சுமித்ரா என்ற திருநங்கையாக மாறியிருந்ததைக் கண்ட தாய் கலைவாணி நீதிமன்றத்தில் அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் திருநங்கையாக மாறியவரிடம், “என் மகன் ராகுலாக வா” என்று கேட்டுள்ளார் கதறிய தாயிடம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாறியிருந்த ராகுல் தன்னால் அப்படி வர முடியாது என வேதனையாக அழுதுள்ளார்.

இதனையடுத்து திருநங்கையாக மாறிய ராகுலை அழைத்த நீதிபதி, “பிச்சை எடுக்கக் கூடாது நன்றாகப் படிக்க வேண்டும். தவறான வழியில் மாறக்கூடாது. தாயை அடிக்கடி சென்று சந்தித்து உதவ வேண்டும்” என அறிவுரை கூறியும்,  ராகுலின் நிலைமையை அவரது தாய் கலைவாணிக்கு  விளக்கிக் கூறினார்.

திருநங்கையாக ராகுலை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், அதேசமயத்தில் மகனை விட்டுப் பிரிந்து செல்ல முடியாமல் கலைவாணி கண்கலங்கிக் கொண்டே கதறி அழுத சம்வம் காண்போரை கலங்கச் செய்தது.