திருப்பூர்,

திருப்பூரில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கனோர் திரண்டு சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு கூடிக்கொண்டே வருகிறது.

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் தன்னார்வ அமைப்பினர், தொழில் துறையினர், அரசியல் கட்சியினர் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை வகித்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கௌரவ தலைவர் ஏ.சக்திவேல், சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம், டீமா சங்க தலைவர் முத்துரத்தினம், வெற்றி அமைப்பு சிவராமன், டெக்மா சங்க தலைவர் ஸ்ரீகாந்த், டெக்பா சங்க தலைவர் கோவிந்தசாமி, தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாத்துரை, தமிழர் மரபு வழி பாதுகாப்பு இயக்கத்தினர், தி.மு.க. மாநகர பொறுப்பாளர் மேங்கோ பழனிச்சாமி, த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் மோகன்கார்த்திக், கொ.ம.தே.க. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ரோபோ ரவிச்சந்திரன், கொ.மு.க. தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் சந்திரசேகர், கொங்குநாடு விவசாயிகள் கட்சி பொதுச்செயலாளர் கொங்குராஜாமணி, இந்து முன்னணி மாநில செயலாளர் தாமு.வெங்கடேஷ்வரன், ஜல்லிக்கட்டு, ரேக்ளா மீட்புக்குழு உள்பட 56–க்கும் மேற்பட்ட அமைப்பினர், கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது “சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பொங்கல் பண்டிகையையொட்டி சால்லிகட்டு நடத்தப்படும் என்றும் பேசினர்.

நாட்டு மாடுகளை காப்பாற்றுவதற்கு சல்லிகட்டை அவசியம் நடத்த வேண்டும். காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கம் செய்ய வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் பேசினர். இதற்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

போராட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள், நாட்டு மாடுகளை காப்பாற்ற சல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தியபடி நின்றபடி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பலகையில் அனைவரும் கையெழுத்தை பதிவு செய்தனர்.