ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சுமார் ஆயிரம் பேர், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

ரயிலில் டிக்கெட் எடுக்காமல், பயணம் செய்வோரிடம் இருந்து அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரம் பேர், 

டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததற்கு, ரயில் பயணிகள் காரணமில்லை; 

ரயில்வே நிர்வாகம்தான் காரணம் என்பது அனைவரையுமே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ராமேஸ்வரம் - மதுரை ரயில் நேற்று காலை 5.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. அந்த நேரத்தில் ஏராளமான பயணிகள், ரயிலை பிடிப்பதற்காக டிக்கெட் கவுன்டர் முன்பாக வெகு நேரம் காத்திருந்தனர்.

ஆனால், ராமேஸ்வரம் - மதுரை ரயில் புறப்படும் நேரம் வரை, டிக்கெட் கொடுப்பதற்கு கவுன்டரில் ஆட்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. ரயில் புறப்படும் நேரம் நெருங்கியதை அடுத்து அவர்கள், ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

ரயில்வே ஊழியருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை என்றும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மண்டல ரயில்வே மேலாளருக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.