Thousands of patients in government hospital Only three doctors to treat ...

மதுரை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பு, சாதாரண காய்ச்சல் என சிகிச்சை பெற ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெறும் மூன்று மருத்துவர்களே உள்ளனர்.

மதுரை மாவட்டம், பேரையூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கை அறைகள் வசதியுள்ளது. பேரையூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் இங்குதான் சிகிச்சைப் பெற வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் மொத்தம் ஏழு மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். குறைவான மருத்துவர்களை வைத்துக்கொண்டு இவர்களால் நோயாளிகளுக்கு சீரான சிகிச்சை அளிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது பேரையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காய்ச்சலால் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் இந்த மருத்துவமனைக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வெறும் மூன்று மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.

மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு முதலுதவி அளித்து, அவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்துபின்பு அதற்கான சிகிச்சைகளை இந்த மூன்று மருத்துவர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் இவர்களால் நோயாளிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரத்த மாதிரி எடுத்து இரத்த அணுக்கள், குறைவாக இருப்பவர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெறுவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

பேரையூர் தாலுகா மருத்துவனைக்கென்று நியமனம் செய்யப்பட்ட ஏழு மருத்துவர்கள் இங்கு பணி புரிந்தால், இங்குவரும் நோயாளிகள் சீரான சிகிச்சைப் பெற்று செல்வர்.

எனவே, பேரையூர் அரசு மருத்துவமனைக்கு போதிய அளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.