தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா, குரிய மின்சக்தி நிலையம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு புதிய விமான சேவைகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், சமீபத்தில் தூத்துக்குடியில் பல்வேறு பூங்காக்கள், மின் உற்பத்தி மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 6 ஆம் தேதி இந்தியாவிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் படிக்க: கூட்டாட்சி - ஆளுநர் பயப்படத் தேவையில்லை... மீண்டும் ஆர் என்.ரவியை வான்டடா வம்பிழுக்கும் முரசொலி..

பர்னிச்சர் பூங்கா:
பூங்கா மூலம் சுமார் ரூ.4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பூங்கா அமைக்க சிப்காட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பர்னிச்சர் தொழில் பூங்கா மூலம் ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்தப் பூங்காவில் மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் இடம் பெறுகின்றன. அதேபோல் இங்கு மிதவை சூரிய மின் சக்தி பூங்காவும் அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன. ஸ்பிக் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 மெகாவாட் திறன் கொண்ட நீரில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டின் மின்சார தேவை பெருமளவில் பூர்த்தி செய்யப்படும்.

புதிய விமான சேவை:
இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் புதிய விமான சேவைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதன்படி பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி விமான சேவை ஏற்படுத்தப்பட உள்ளது.மார்ச் 27ம் தேதி முதல் தூத்துக்குடி-பெங்களூரு இடையே தினசரி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இங்கு தற்போது ஓடுபாதை 1,350 மீட்டராக உள்ளது. இதை 3,115 மீட்டராக மாற்றும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை செய்து வருகிறது. இதற்காக ரூ.380 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன் பின் இங்கு மேலும் பல விமான சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. தூத்துக்குடியில் பல்வேறு பூங்காக்கள், தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்த விமான சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே அமைக்கப்படவுள்ள 6 வழி சாலைக்கான ஆய்வு பணிகள் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு வருடத்திற்குள் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கும். அதன்பின் சாலைகள் விரிவுபடுத்தப்படும். அடுத்தடுத்த திட்டங்கள் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி வேகமாக முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ரெய்டு..! ரெய்டு..! முன்னாள் மாஜிகளின் கிரிப்ரோ கரன்சி முதலீடு.. சோதனை முதல் பறிமுதல் வரை முழு விவரம்..
