குண்டடம்

குண்டடம் பகுதியில், பயிரிட்ட மக்காச்சோளம் மழை பொய்த்துப் போனதால் கொஞ்சம்தான் விளைஞ்சது. அதுவும், அடித்த சூறாவளிக் காற்றுக்கு, மொத்தமும் சாய்ந்து பலியாகி விட்டன என்று விவசாயி ஈசுவரன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

சென்னையில் திங்கள்கிழமை கரையை கடந்த வார்தா புயல் சென்னையை புரட்டிப் போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அதே நேரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், இலேசான சாரல் மழையும் பெய்தது.

அதேபோல் குண்டடம் பகுதியில் ஊசிப் போல சாரல் மழை பெய்தது. அப்போது பயங்கர சூறாவளிக்காற்று வீசியது.

இந்தக் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேட்டுக்கடை, முத்துக்கௌண்டம் பாளையம், சந்திராபுரம், நந்தவனம் பாளையம் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது கதிர் தள்ளிய நிலையில் மக்காச் சோளப்பயிர்கள் இருந்தன. இவையனைத்தும் அடித்த பலத்த காற்றுக்கு வேருடன் சாய்ந்தன.

இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்திக்க நேரிட்டது. அதுமட்டுமின்றி இந்த போகமே வீணாகிப் போனது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் கிடக்கின்றன.

இது குறித்து தும்பலப்பட்டியை சேர்ந்த விவசாயி ஈசுவரன் கூறியதாவது:–

இந்த போகத்தில் இரண்டு ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்திருந்தேன். மழை பொய்த்துப் போய் கொஞ்சம்தான் விளைஞ்சது. அதுவும், அடித்த சூறாவளிக் காற்றுக்கு, மக்காச்சோள பயிர் மொத்தமும் சாய்ந்து விட்டன.

இதனால் சுமார் ரூ.1.20 இலட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டடம் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோளம் சாய்ந்து விட்டன என்று கவலையுடன் கூறினார்.