திருவண்ணாமலை

பெண்கள் அனைவருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என்பதால்தான் வரதட்சணை கொடுமை வெகுவாக குறைந்துள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி க.மகிழேந்தி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழு ஆகியவை இணைந்து களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தின. 

இந்த முகாமிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி க.மகிழேந்தி தலைமை வகித்தார். ஆரணி சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எஸ்.எழில்வேலவன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் வரவேற்றார்.

இந்த முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி க.மகிழேந்தி, "அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியவில்லையே என ஏங்க வேண்டாம். பாடத்தை புரிந்து படித்தால் ‘நீட்’ தேர்வில் வெற்றிப் பெற்று மருத்துவர் ஆகலாம். 

பலவித ஆய்வுகளில் கூட முனைவர் பட்டம் பெறலாம். முன்னாள் முதலமைச்சர் அண்ணா, சட்டமேதை முனைவர் அம்பேத்கர், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் பல அரிய சமுதாய சீர்திருத்தப் பணிகளால் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

கணினி காலத்திலும் தெருவில் யார் வருகிறார்? என சகுனம் பார்க்கும் மூடநம்பிக்கை இன்றும் இருப்பது வேதனை அளிக்கிறது. 

போக்குவரத்துச் சட்டம், ராக்கிங் சட்டம் ஆகியவை தற்போது கடுமையாக இருப்பதை மாணவர்கள் மனதில் கொண்டு அடுத்து வரும் கல்வியாண்டில் கல்லூரியில் சேரும்போது கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். 

2005-க்கு பிறகு பெண்கள் அனைவருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு. இதனால் வரதட்சணை கொடுமை வெகுவாக குறைந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். 

இந்த முகாமில் அரசு வழக்குரைஞர் வி.வெங்கடேசன், சங்க முன்னாள் தலைவர்கள் எ.சிகாமணி, எஸ்.தனஞ்செயன் மற்றும் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 

முகாமின் இறுதியில் வட்டச் சட்டப் பணிகள் குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை நன்றித் தெரிவித்தார்.