Tamil Nadu Day : மதராஸ் மாகாணம் டூ தமிழ்நாடு.. ஜூலை 18 - தமிழ்நாடு நாள் வரலாறு தெரியுமா?
மதராஸ் மாகாணம் என்ற பெயரை 1967-ம் ஆண்டு ஜூலை 18ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த நாள் தமிழ்நாடு நாள் என வருடந்தோறும் தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு விடுதலைக்கு முன்னர் மாகாண அமைப்பு முறையே நடைமுறையில் இருந்தது. சென்னை மாகாணம் என்பது இன்றைய கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிஷா மாநிலங்களின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்து வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, 1956, நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை `மதராஸ் மாகாணம்' என அழைக்கப்பட்டு வந்த பகுதியில், தமிழர்கள் வாழ்ந்த பகுதி மட்டும் `மதராஸ் ஸ்டேட்' ஆனது.
மாகாண அமைப்பு முறையானது பல மாநிலங்களாக 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் மாற்றி அமைக்கப்பட்டது. இதனடிப்படையில் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர 1-ந் தேதியை தங்களது மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றன.மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர்களிலேயே அழைக்கப்பட்டு வந்தன. ஆகையால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று மாநிலங்கள் பிரிவினைக்கு முன்னரே 1955-லேயே தந்தை பெரியார் குரல் கொடுத்தார். 1956 அக்டோபரில் தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிர் நீத்தார். ராஜ்யசபாவுக்கு சென்ற மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவும் Call my State TAMIL NADU என முழங்கினார்.
அதாவது என்னுடைய மாநிலத்தை தமிழ்நாடு என அழைக்க வேண்டும் என வலியுறுத்தி அண்ணா, ராஜ்யசபாவில் உரையாற்றினார். “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்புவரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது” என்று காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு, ‘பரிபாடல்’, ‘பதிற்றுப்பத்து’, ‘மணிமேகலை’, ‘சிலப்பதிகாரம்’ உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லிப் பதிலளித்தார் அண்ணா.
மேலும் பேசிய அண்ணா, கம்பரும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், ‘தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?’ என்று கேள்வி எழுப்பினார்.இதன்பின்னர் 1967-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரியணை ஏறியது. பேரறிஞர் அண்ணா முதல்வராக பதவி வகித்தார்.
அப்போது அதாவது 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி முதல்வர் அண்ணாவே, தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான தனி மசோதா கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார். அன்று முதல் சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என்பது அடியோடு ஒழிந்து தமிழ்நாடு என பெயர் சூட்டிக் கொண்டது என்றே சொல்லலாம். வருடந்தோறும் ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் கொண்டாடி வருகிறோம்.