இதற்காகத்தான் பிடிஆரை துறை மாற்றினேன்- உண்மையை போட்டுடைத்த முதல்வர் ஸ்டாலின்!
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டது குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்
தமிழக நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டபோதே பெரிதும் பேசப்பட்டவர். அமைச்சராகி இவர் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இவர் ஆற்றிய உரை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது. பிற மாநிலங்கள் பிடிஆரை கொண்டாடிய நிலையில், இங்குள்ள எதிர்க்கட்சிகளும், பாஜகவும் அவரை சீண்ட ஆரம்பித்தன.
ஆனால், பிடிஆரோ தனது பாணியில் அவர்களுக்கு கவுன்ட்டர் கொடுக்க ஆரம்பித்தார். இது அவ்வப்போது சர்ச்சையானதற்கிடையே, தான் வகித்து வந்த திமுக ஐடி விங்க் செயலாளர் பதவியை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்தார். நிதிஅமைச்சக பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், பதவியை ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, நிதியமைச்சராக சிறப்பாக பணியாற்றி வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தங்கம் தென்னரசு நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாஜக கொடுத்த குடைச்சல், சக அமைச்சர்களின் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதில் கறார் காட்டியது, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் குறித்து பிடிஆர் பேசியதாக பின்னர் அது போலி என அவர் விளக்கம் அளித்த ஆடியோ சர்ச்சைகளுக்கு மத்தியில் பிடிஆர் பழனிவேல் துறை மாற்றப்பட்டது சலசலப்புகளை ஏற்படுத்தியது. திமுக அனுதாபிகளே பிடிஆர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு நிலை சென்றது.
இந்த நிலையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டது குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் 'Umagine TN 2024' என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மாற்றத்திற்காகவே மாற்றம் செய்யப்பட்டார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.” என்றார். முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின், “நிதித்துறையில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர் பழனிவேல் தியாகராஜன். நிதித்துறையை போலவே ஐ.டி. துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டதால் பழனிவேல் தியாகராஜனை அமைச்சராக நியமித்தேன்.” என்றார்.
இன்றளவும் முதல்வர் ஸ்டாலினின் குட் புக்கிலேயே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருப்பதாக கூறப்படும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.