ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 8 பேருக்கு கொரோனா... அதிர்ச்சியில் அலுவலர்கள்... திருவாரூரில் பரபரப்பு!!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அலுவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அலுவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த நிலையில் தொற்றினை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தினந்தோறும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு இரண்டு வகையான கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது ஒமைக்ரான் என்னும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், பொதுமக்கள் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூட கூடாது, அனைவரும் முக கவசம் அணிந்து செல்லவேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்கள் இருவர், கணினி உதவியாளர் ஒருவர், ஓட்டுநர், தூய்மை காவலர் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனை மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பணியாற்றி வருவதால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்களும் தினம் தோறும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்களை சந்தித்து வருவதால் கடந்த இரண்டு தினங்களில் யார் யார் சந்தித்தார்கள், அவர்கள் அனைவரையும் தொற்றுக்கான பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அவர்கள் வீடு மற்றும் முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அரசு அலுவலர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. தற்பொழுது கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே தனிமனித இடைவெளி கடைப்பிடித்து செயல்பட வேண்டும், திருவிழாக்காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூட வேண்டாம், தனிமனித இடைவெளி கடைப்பிடித்து பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும், அதனை அந்தந்த வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.