thiruvannamalai karthigai deepam festivel started
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை மாத, தீபத் திருவிழா, இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்..
சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள்.
இந்நிலையில் 10 நாள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் பஞ்ச உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்துதங்க கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி , ஆன்மீக பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 29-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு வரை நடைபெறும். டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
