thiruvallur teacher not allowed by student to go transfer
திருவள்ளூரை அடுத்த வெளியகரம் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் மாற்றலாக வேறு பள்ளிக்கு சென்றபோது, அவரை போகக்கூடாது என மாணவ- மாணவிகள் கண்ணீருட்ன் கட்டிப்பிடித்து கெஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
பொதுவாக இந்த சமுதாயத்தை சிறப்பாக உருவாக்குபர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள்ஆசிரியர்கள்தான். மாணவர்களை நல்லவர்களாக செதுக்கி அவர்களை உருவாக்குவதில் அவர்கள் பங்கு முக்கியமானதாகும். அவர்கள் மாணவர்களிடம் நண்பனாக, தந்தையாக மாறி அவர்களை வார்த்தெடுக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றபோது மாணவர்கள் அவரைப் பள்ளியை விட்டுச் செல்ல அனுமதி மறுத்து கட்டிப்பிடித்து கதறி அழுத சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்ற இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் பணிக்கு வந்தார். மாணவ மாணவிகளுக்கு சக தோழனாக இருந்து அவர் கல்வி கற்றுத்தர ஆங்கிலப் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமான பாடமானது.
பாடம் எடுப்பதில் அவரது அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட சிரத்தை காரணமாக அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கு பிடித்தமானவராக மாறிப்போனார் பகவான். இந்நிலையில்தான் பகவானுக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.
இதை அறிந்த மாணவ மாணவியர்கள் கதறி அழுதனர். நீங்கள் பள்ளியை விட்டு போகக் கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் பணியிட மாற்றம் பெற்றதால் அதற்கான ஆர்டரை வாங்கப் பள்ளிக்கு வந்தார்.
இதை அறிந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து அவர் முன்னால் அமர்ந்து பள்ளியை விட்டுப் போகாதீர்கள் என்று அழுதனர். அவர்களுக்கு சமாதானம் கூறிய ஆசிரியர் பகவான் ஒரு கட்டத்தில் அவர்களது அன்பை எண்ணி அவரும் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் மாணவ, மாணவியர் அவரை சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தபடி எங்களை விட்டுப் போகாதீர்கள் சார் என்று கதறி அழுதனர்.
இதனால் அவர் வெளியே செல்ல முடியவில்லை. மற்ற ஆசிரியர்கள் வந்து சமாதானம் செய்தும் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸை வரவழைத்து சமாதானப்படுத்தி பின்னர் ஆசிரியரைப் போக அனுமதித்தனர்.
சாட்டை திரைப்படத்தில் ஆசிரியர் சமுத்திரகனியின் கதாபாத்திரத்தை நினைவு படுத்தும் வகையில் நடந்த இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
