Thirunelveli protest arrest

நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின், இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது என்று தனியார் தொலைக்காட்சியின் வள்ளியூர் செய்தியாளர் ராஜு கிருஷ்ணா மற்றும் நெல்லை செய்தியாளர் நாகராஜன் ,தினகரன் பணகுடி செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப அது தொலைக்காட்சியிலும், தினகரன் நாளிதழிலும் செய்தியாக வெளியானது.

இந்நிலையில் இஸ்ரோ மையம் குறித்து அவதுாறாக செய்தி வெளியிட்டதாக சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் மீது பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோன்ஸ் வழக்குபதிவு செய்துள்ளது கண்டித்தக்கது.சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு மணல் கொள்ளையர்களுடன் தொடர்பு உள்ளது.

எனவே அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.மேலும் செய்தியாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று திருநெல்வேவி மாவட்ட எஸ்பி அலுவலத்தை திருநெல்வேலி பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்ந்து பேசிய நெல்லை மாவட்ட மூத்த செய்தியாளர்கள்,செய்தி வெளியிட்டதற்காக வழக்கு பதிந்தது கண்டிக்கதக்கது. போலீசார் போட்ட வழக்கை உடனே திரும்ப பெற வேண்டும்.இல்லையெனில் தமிழகம் முழுதும் போராட்டங்கள் தொடரும் என்றனர். பின்னர் நெல்லை மாவட்ட டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெனிவா சென்றுள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.